ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி
|ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா- மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.
ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹர்காக்ஸ் 6-3, 3-6, 7-6 (8) என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 2 மணி 6 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21 ஏஸ் சர்வீஸ்களை வீசியது அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள ஹர்காக்ஸ் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டில் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிசில் மகுடம் சூடி இருந்தார். அவருக்கு ரூ.10½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 2-6, 7-10 என்ற செட் கணக்கில் மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஸிபல்லாஸ் (அர்ஜென்டினா) இணையிடம் போராடி தோற்றது. கிரோனோலர்ஸ் ஜோடிக்கு ரூ.3½ கோடியும், போபண்ணா இணைக்கு சுமார் ரூ.2 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
தோல்வி அடைந்தாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் போபண்ணா- எப்டென் கூட்டணி டாப்-8 ஜோடிகள் மட்டுமே கலந்து கொள்ளும் உலக ஏ.டி.பி. டூர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.