விம்பிள்டன் : கலப்பு இரட்டையர் அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக சானியா மிர்சா தகுதி..!!
|சானியா மிர்சா - மேட் பாவிக் இணை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
லண்டன்,
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தற்போது நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் (இந்தியா) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா) இணை டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) - நடேலா டிசலமிட்ஸே (ஜார்ஜியா ) இணையை எதிர்கொண்டனர்.
இந்த ஆட்டத்தில் 6-4 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சானியா மிர்சா - மேட் பாவிக் இணை வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில், அடுத்த சுற்றில் இவான் டோடிக் மற்றும் லதிஷா சான் ஜோடி பங்கேற்காததால், வாக்-ஓவர் அடிப்படையில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் இணை ஜான் பீர்ஸ் மற்றும் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணையை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் இணை 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.