தோழியை காதலிப்பதாக அறிவித்த பிரபல டென்னிஸ் வீராங்கனை - வைரலாகும் புகைப்படம்
|பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா, தோழி நடாலியா ஜாபியாகோ-வை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.
மாஸ்கோ,
ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓப்பன் தொடரில் அரையிறுதி போட்டி வரை முன்னேறியவர். இந்த நிலையில் இவர் தற்போது தனது தோழி நடாலியா ஜாபியாகோ-வை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.
ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ள பல நாடுகள் சட்டபூர்வமாக அனுமதி அளித்துள்ளன. இருப்பினும் சில நாடுகளில் இதற்கான தடைகள் தொடர்கின்றன. ரஷ்யாவில் ஒருபால் காதலுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் உள்ளன. தற்போது அதை விரிவுபடுத்தும் முயற்சியில் சட்டம் இயற்றுபவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தனது நாட்டின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பிறருக்காக மறைவில் வாழ்வது அர்த்தமற்றது. நாம் நிம்மதியாக வாழ்வது மட்டுமே முக்கியம். விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் இது பற்றி பேசுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்." என தெரிவித்தார்.
டாரியா தான் காதலித்து வரும் தோழியின் புகைப்படம் ஒன்றையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இருவரும் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.