வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு
|போலந்து நாட்டில் நடைபெறும் வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவுக்கு போலந்து நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
போலந்து,
போலந்து நாட்டில் வார்சா ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதில் பங்கேற்பதற்காக சென்ற 38 வயதான ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். நாட்டின் பாதுகாப்பு கருதி ரஷியர்கள் போலந்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளனர்.
இது குறித்து போலந்து நாட்டின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது,
'ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்களை போலந்தில் நடைபெறும் போட்டிக்கு அனுமதிப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதி இல்லை' என்று கூறியுள்ளது.
பெலாரஸ் எல்லையில் போலந்து தனது பாதுகாப்பை வலுப்படுத்திய பின்னர் ரஷிய ஜனாதிபதி விலாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அது நடந்த பின் ரஷிய வீராங்கனைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.