ரோஜர் பெடரர் வருகை... 'வாத்தி கம்மிங்' என்று பதிவிட்ட விம்பிள்டன்
|ரோஜர் பெடரர் வருகையை 'வாத்தி கம்மிங்' என்று குறிப்பிட்டு விம்பிள்டன் நிர்வாகம் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது.
லண்டன்,
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1877 முதல் விம்பிள்டன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். அவர் நடப்பு தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவர் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.
அப்போது அவர் வருகை தந்த புகைப்படத்தை 'வாத்தி கம்மிங்' என்று குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் விம்பிள்டன் நிர்வாகம் பகிர்ந்துள்ளது, இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல், தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் யூ-டியூபில் 37 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து, வெளிநாட்டு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. கடந்த சில ஐ.பி.எல். சீசனுக்கு முன்னர் வீரர்கள் இந்த பாட்டுக்கு நடனமாடி இருந்தனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த இந்த பாடல், தற்போது விம்பிள்டன் வரை சென்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.