ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்
|அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அறிவித்துள்ளார்
மேட்ரிட்,
டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் , டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டியானது , இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இதையடுத்து , முற்றிலுமாக டென்னிஸ் போட்டியில் இருந்து விலகி இருக்கப்போவதாக நாடல் அறிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். 38 வயதான ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ரபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று ரபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரபேல் நடால் அதில், தொழில்முறை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகள் தனது வாழ்நாளில் கடினமான ஆண்டுகள் என்றும் தன்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றும் நடால் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
முன்னதாக தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரபேல் நடால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தி இருந்தார். நடப்பு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார். 63 டென்னிஸ் தொடர் வெற்றிகள், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம், அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என்ற பல்வேறு சாதனைகளை ரபேல் நடால் தக்கவைத்துள்ளார்.