< Back
டென்னிஸ்
இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது மிகச்சிறந்த கவுரவம் -  கண்ணீர் மல்க விடைபெற்றார் சானியா மிர்சா
டென்னிஸ்

'இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது மிகச்சிறந்த கவுரவம்' - கண்ணீர் மல்க விடைபெற்றார் சானியா மிர்சா

தினத்தந்தி
|
6 March 2023 1:33 AM IST

ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் ஆடிய சானியா மிர்சா கண்ணீர் மல்க விடைபெற்றார்.

ஐதராபாத்,

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சொந்த ஊரான தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.

தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரண்டு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா வெற்றி பெற்றார். சானியாவின் முன்பு இரட்டையர் பிரிவில் ஆடிய முன்னாள் வீராங்கனைகள் காரா பிளாக் (ஜிம்பாப்வே), மரியன் பார்டோலி (பிரான்ஸ்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தனர்.

போட்டியை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தெலுங்கானா மந்திரிகள் கே.டி.ராமா ராவ், வி.சீனிவாஸ் கவுடு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முகமது அசாருதீன், யுவராஜ்சிங் மற்றும் சானியாவின் குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர்.

36 வயதான சானியா மிர்சா 2005-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இது தான். அதே சமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்

கண்காட்சி போட்டியின் போது உணர்வுபூர்வமாக பேசிய சானியாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அவர் பேசும்போது '2002-ம் ஆண்டு இங்கு தேசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில் இருந்து எனது டென்னிஸ் பயணம் தொடங்கியது. இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது மிகச்சிறந்த கவுரவமாகும். இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும். அதை நான் நிறைவு செய்து விட்டேன். நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறேன்.

எனது கடைசி போட்டியை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியது, பரவசமளிக்கிறது. அவர்களின் ஆதரவும், உற்சாகமும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது.

இனி களத்தில் உங்களை (ரசிகர்கள்) எல்லாம் தவற விடப்போகிறேன். தெலுங்கானா மாநில அரசுடனும், மாநில விளையாட்டு ஆணையத்துடனும் இணைந்து பணியாற்றி இன்னொரு சானியாவை நிச்சயம் உருவாக்குவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நமக்கு இன்னும் நிறைய சானியாக்கள் தேவை. அதற்காக பணியாற்றுவேன்' என்றார்.

மேலும் செய்திகள்