பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற 19 வயது இளம் வீரர்
|பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் நோவாக் ஜோகோவிச், 19 வயது இளம் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
பாரிஸ்,
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரும் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான நோவாக் ஜோகோவிச் 19 வயது இளம் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். பாரிஸ் மாஸ்டர்ஸ் 1000 ஏடிபி டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்றது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்சை 19 வயதான டென்மார்க் நாட்டு இளம் வீரர் ஹோல்கர் ரூனே எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்று பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, ரூனேவும் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தரவரிசையில் டாப் 10 வீரர்கள் பலரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ரூனே 6-3 என வெற்றி பெற்று ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி தந்தார். தொடர்ந்து அபார ஆட்டதைத் வெளிப்படுத்திய இளம் வீரர் ரூனே இறுதி செட்டை 7-5 என கைப்பற்றி பட்டத்தை தட்டி சென்றார்.
இதன் மூலம் 3-6,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இளம் வீரர் ரூனே. இந்த வெற்றியின் மூலம் ரூனே தரவரிசையில் முதல் முறையாக டாப்-10 பட்டியலில் முன்னேறியுள்ளார்.