< Back
டென்னிஸ்
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி
டென்னிஸ்

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
22 Sept 2022 5:10 AM IST

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோ,

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 3-6, 2-6 என்ற நேர்செட்டில் 36-வது இடத்தில் உள்ள கின்வென் செங்கிடம் (சீனா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 19 வயதான கின்வென் செங், 'டாப்-10' இடத்துக்குள் இருக்கும் ஒரு வீராங்கனையை சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.

தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரங்கனை கரோலின் கார்சியா 6-4, 6-7 (5-7), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சூவாய் ஜாங்கிடம் போராடி வீழ்ந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் லிட்மினா சாம்சோனோவாவிடம் பணிந்தார். இதே போல் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) 4-6, 1-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் கிளைர் லியிடம் தோற்று நடையை கட்டினார்.

கொரியா ஓபனில் அங்கிதா தோல்வி

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 129-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 1-6, 3-6 என்ற நேர்செட்டில் 70-வது இடத்தில் உள்ள லின் ஹூவிடம் (சீனா) சறுக்கினார்.

மற்றொரு ஆட்டத்தில் சமீபத்தில் நடந்த சென்னை ஓபனில் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 74-வது இடத்தில் இருப்பவருமான செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா 1-6, 4-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 396-வது இடத்தில் உள்ள யானினா விக்மேயரிடம் (பெல்ஜியம்) தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.

மேலும் செய்திகள்