பாகிஸ்தான் இளம் டென்னிஸ் வீராங்கனை திடீர் மரணம்
|இவரது மறைவையொட்டி நேற்று நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றன.
கராச்சி,
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்) சார்பில் ஐ.டி.எப் ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த 17 வயதே ஆன, இளம் வீராங்கனை ஜைனப் அலி நக்வி விளையாடி வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த திங்களன்று தனது அறையில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். சிறிது நேரம் கழித்து இதனை கண்ட உதவியாளர்கள் அவரை மீட்டு இஸ்லாமாபாத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவர்கள், மரணத்திற்கு இயற்கையான காரணம் என்று கூறியுள்ளனர். அவரது பெற்றோர் பிரேத பரிசோதனை மேற்கொள்வதை விரும்பவில்லை. மேலும் அவரது உடலை கராச்சிக்கு கொண்டு செல்ல பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்," என்று கூறினார்.
'இது மிகவும் வருத்தமளிக்கிறது, ஏனெனில் ஜைனப் மிகவும் நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக இருந்தார். மேலும் ஐ.டி.எப். ஜூனியர் போட்டிகளில் வெற்றி பெற ஆர்வத்துடன் கடுமையாக உழைத்தார்" என்று பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜைனப் அலி நக்வியின் திடீர் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவையொட்டி நேற்று நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றன.