கிரிக்கெட் விளையாடிய நம்பர் 1 டென்னிஸ் வீரர்....!
|ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் சுமித், டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடி அசத்தினார்.
மெல்பொர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் சுமித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடி அசத்தினார்.
சுமித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை சுமித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் சுமித்-க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் தனக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.