பிரெஞ்சு ஓபன் : சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ஜனாதிபதி வாழ்த்து
|23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லி,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இகா ஸ்விடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மற்றும் நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிக் 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன்படி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் 3வது முறையாக கைப்பற்றினார். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 23வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார்.
இந்த இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் மீண்டும் உலகின் நம்பர் 1 விரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். இந்தப் போட்டிக்கு முன்பு நடாலும், ஜோகோவிச்சும் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பிரெஞ்ச் ஓபனில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வென்றதற்காக, டென்னிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நோவக் ஜோகோவிக்கிற்கு வாழ்த்துக்கள்.
சில நாட்களுக்கு முன்பு நான் மறக்க முடியாத நேரத்தை செலவழித்த செர்பியா மக்களின் சிறப்பான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
செர்பியா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு நோவக் ஜோகோவிச் ஒரு எழுச்சியூட்டும் சின்னமாக உள்ளார். அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிவிட்டுள்ளார்.