'யுஎஸ் ஓபன் 2023-ல் கார்லஸ் அல்காரசுடன் மோத விருப்பம்'- நோவக் ஜோகோவிச்
|விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்.
செர்பியா,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்.
ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜோகோவிச் யுஎஸ் தொடருக்கு தயாராகும் தனது திட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
விம்பிள்டன் தோல்விக்கு பின் செர்பிய அவுட்லெட் ஸ்போர்ட் க்ளப்பில் பேசிய ஜோகோவிச், ''அவர் சின்சினாட்டியில் நடைபெறும் வெஸ்டர்ன் & சதர்ன் ஓபன் தொடரில் பங்கேற்பார். மேலும் டொராண்டோவில் நடைபெறும் ரோஜர்ஸ் கோப்பையை தவறவிடுவதாகவும் தெரிவித்து உள்ளார். யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்கும் பயிற்சி போட்டியாக சின்சினாட்டியில் விளையாட உள்ளதாக" அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் 'விம்பிள்டன் தோல்விக்குப் பிறகு, கார்லோஸ் அல்காரசுடன் யுஎஸ் ஓபனில் மோத ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்றும் கூறினார்.
கொரோனா தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான நுழைவு விதி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து டென்னிஸ் நிகழ்வுகளையும் ஜோகோவிச் தவறவிட்டார். அவர் யுஎஸ் ஓபன் உட்பட 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டிற்க்கு இடையில் 6 தொடர்களைத் தவறவிட்டுள்ளார். தற்போது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதால் 2 ஆண்டுகளுக்குப் பின் ஜோகோவிச் யுஎஸ் ஓபனில் பங்கேற்க உள்ளார்.
இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.