விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஜோகோவிச்சுக்கு அபராதம் விதிப்பு...!
|விம்பிள்டன் இறுதிப்போட்டியில்ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினை சேர்ந்த 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரசும் மோதினர்.
4 மணி 42 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தார். இதன் மூலம் 'நம்பர் ஒன்' இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். 20 வயதான அல்காரஸ் வென்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2022-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனை வென்று இருந்தார்.
விம்பிள்டன் புல்தரை மைதானத்தில் ஜோகோவிச் தொடர்ச்சியாக 34 வெற்றிகளை பெற்றிருந்தார். அவரது வீறுநடைக்கு அல்காரஸ் முடிவு கட்டினார். அத்துடன் விம்பிள்டனை 8-வது முறையாக சொந்தமாக்கி, ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய எடுத்த அவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. வாகை சூடிய அல்காரசுக்கு ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆத்திரத்தில் தமது டென்னிஸ் மட்டையை உடைத்தார்.
இந்த செயலுக்காக அவருக்கு 8,000 டாலர் அபராதம் விதித்துள்ளது விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம். 8,000 டொலர் அபராதம் என்பது தனியொரு டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விதிக்கப்படும் பெருந்தொகை என்றே கூறப்படுகிறது.