< Back
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!

தினத்தந்தி
|
3 Sept 2023 1:27 AM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சரிவில் இருந்து மீண்டு வெற்றியை வசப்படுத்திய செர்பிய வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 38-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த லாஸ்லோ ஜெரியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த ஜோகோவிச், அதன் பிறகு தனது அனுபவ ஆட்டத்தின் துணையுடன் சரிவில் இருந்து அபாரமாக மீண்டதுடன் வெற்றியையும் தன்பக்கம் திருப்பினார். 3 மணி 45 நிமிடம் நீடித்த இந்த போராட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் முதல் 2 செட்களை இழந்த பிறகு ஜோகோவிச் வெற்றி காண்பது இது 8-வது முறையாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், குரோஷியாவின் போர்னா ஜோகோவை எதிர்கொள்கிறார். போர்னா 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் ஜிரி வெஸ்லியை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

வெற்றிக்கு பிறகு 36 வயதான ஜோகோவிச் கூறுகையில், 'கடைசி ஷாட் வரை இந்த போட்டி பதற்றமாக இருந்தது. நான் கடந்த பல வருடங்களாக இங்கு ஆடிய போட்டிகளில் இது கடினமான ஒன்றாக இருந்தது. தொடக்கத்தில் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காத வகையில் லாஸ்லோ சிறப்பாக ஆடினார். 3-வது செட்டில் எனது ஆட்ட தரத்தை உயர்த்தினேன். முதல் 2 செட்களுக்கு பிறகு லாஸ்லோ ஆட்டத்தை நன்கு கணித்து செயல்பட்டேன்' என்றார்.

அமெரிக்க வீரர்கள் வெற்றி

மற்ற ஆட்டங்களில் அமெரிக்க வீரர்களான டாமி பால் 6-1, 6-0, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிடோவிச் போகினாவையும், பிரான்சிஸ் டியாயோ 4-6, 6-2, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பிரான்ஸ் நாட்டின் அட்ரியன் மன்னரினோவையும், டெய்லர் பிரிட்ஸ் 6-1, 6-2, 6-0 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் ஜாகுப் மென்சிக்கையும், பென் ஷெல்டன் 6-4, 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அஸ்லான் கரட்சேவையும் தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர்செட்டில் 49 நிமிடங்களில் சுலோவேனியாவின் காஜா ஜூவனை ஊதித்தள்ளி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

கோகோ காப் வெற்றி

உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் 19 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சரிவை சமாளித்து 3-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் 32-ம் நிலை வீராங்கனையான எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) சாய்த்தார். இதேபோல் முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 4-6, 6-3, 6-1 என்ற அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் வோஸ்னியாக்கி, கோகோ காப்புடன் மோதுகிறார். முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 3-6, 7-6 (8-6), 4-6 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சோரனா கிறிஸ்டியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), ஜின்யு வாங் (சீனா) ஆகியோர் வெற்றியை ருசித்து 4-வது சுற்றில் கால் பதித்தனர்.

போபண்ணா ஜோடி முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே கோலுபி (கஜகஸ்தான்)-ரோமன் சபியுலின் (ரஷியா) இணையை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் ரோகன் போபண்ணா கூட்டணி, இங்கிலாந்தின் ஜூலியன் காஷ்-ஹென்றி பாடென் இணையுடன் மோதுகிறது.

மேலும் செய்திகள்