< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இழக்கும் நிக் கிர்கியோஸ்..!
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இழக்கும் நிக் கிர்கியோஸ்..!

தினத்தந்தி
|
3 July 2023 1:18 PM IST

மணிக்கட்டு காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் விலகியுள்ளார்.

லண்டன்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள அவர் புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவையும் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தவரான முன்னாள் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை சமன் செய்வார். தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஜோகோவிச் முதல் சுற்றில் 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதுகிறார்.

ஜோகோவிச்சுக்கு 'நம்பர் ஒன்' இளம் புயல் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), ரூப்லெவ் (ரஷியா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) உள்ளிட்டோர் கடும் சவால் அளிக்க வரிந்துகட்டுகிறார்கள். அல்காரஸ் முதல் சுற்றில் ஜெரிமி சார்டியை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக் கிர்கியோஸ் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

இதற்குமுன்னர் அவரின் முட்டிக்காலில் அடிபட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியது;

"விம்பிள்டனில் விளையாடவேண்டும் என்பதற்காக அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டுவர கடுமையாக முயற்சிசெய்தேன். ஆனால் கடந்த வாரம் மயோர்க்காவில் நடைபெற்ற ஆட்டத்தின்போது கை மணிக்கட்டில் மீண்டும் வலி ஏற்பட்டது" என்றார்

மேலும் ஸ்கேன் பரிசோதனையில் தசையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இது எனக்கு ஏமாற்றம் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும் என்று கிரியோஸ் கூறினார்.

நிக் கிர்கியோஸ் முந்தைய ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதி போட்டி வரை சென்று நோவாக் ஜோக்கோவிச்சிடம் தோற்று 2ஆம் இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் செய்திகள்