தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ்: கால்இறுதியில் தமிழக பெண்கள் அணி தோல்வி
|84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
சென்னை,
84-வது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி (17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 3-1 என்ற கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
தமிழக அணியில் ஒற்றையர் ஆட்டத்தில் காவ்யா ஸ்ரீ 11-8, 11-9, 11-9 என்ற நேர்செட்டில் அனர்கயாவை (கர்நாடகாவை) வீழ்த்தினார். அவர் மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் 4-11, 12-13, 9-11என்ற நேர்செட்டில் யாஷஸ்வினியிடம் தோல்வியை சந்தித்தார். மற்ற தமிழக வீராங்கனைகள் ஹன்சினி, ஷர்வானியும் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர்.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் மராட்டிய அணி 3-1 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்தையும், மேற்கு வங்காளம் 3-0 என்ற கணக்கில் தெலுங்கானாவையும், அரியானா 3-2 என்ற கணக்கில் டெல்லியையும் விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன.