மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் அல்காரஸ் வெற்றி
|ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நேரடியாக களம் கண்ட உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-0, 6-2 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் பாகுன்டோ பாக்னிஸ்சை 65 நிமிடத்தில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் இவாஷ்காவை (பெலாரஸ்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 0-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் தாரா டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி), டாமி பால் (அமெரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா), வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து), டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.