< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் சின்னர்

image courtesy: Jannik Sinner twitter

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் சின்னர்

தினத்தந்தி
|
2 April 2023 3:01 AM IST

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை சந்தித்தார்.

3 மணி நேரம் பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஜானிக் சின்னர் சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 6-7 (4-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் சின்னர், சர்வதேச போட்டியில் தொடர்ந்து 10 வெற்றிகளை ருசித்து இருந்த அல்காரஸ்சின் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 2 வாரங்களுக்கு முன்பு அவரிடம் இண்டியன்வெல்ஸ் போட்டியின் அரைஇறுதியில் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தார்.

இந்த தோல்வியின் மூலம் கார்லஸ் அல்காரஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார். நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜோகோவிச் நம்பர் ஒன் இடத்தை அல்காரஸ்சிடம் பறிகொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு அல்காரஸ் அளித்த பேட்டியில், 'சின்னருக்கு எதிரான ஆட்டம் எப்பொழுதும் கடினமான போராட்டமாக இருக்கும். இந்த ஆட்டம் இருவருக்கும் சிறப்பானதாக அமைந்தது. நான் நம்பர் ஒன் இடம் மற்றும் சன்ஷைன் பட்ட வாய்ப்பை இழந்தது குறித்து சிந்திக்கவில்லை. இருப்பினும் இந்த தோல்வி வருத்தம் அளிக்கிறது' என்று தெரிவித்தார்.

இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மெட்விடேவ்-ஜானிக் சின்னர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்