மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி
|பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா, கமிலா ஜியோர்ஜியை (இத்தாலி) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் கமிலா ஜியோர்ஜியை (இத்தாலி) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனும், சமீபத்தில் நடந்த இண்டியன்வெல்ஸ் போட்டியில் பட்டம் வென்றவருமான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை (ரஷியா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார்.
சர்வதேச போட்டியில் ரைபகினா தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். மற்ற ஆட்டங்களில் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), பாலா படோசா (ஸ்பெயின்), கோகோ காப் (அமெரிக்கா), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெக்கன்சி மெக்டொனால்டு (அமெரிக்கா), கிறிஸ்டியன் காரின் (சிலி), சோனிகோ (இத்தாலி) உள்ளிட்டோர் முதல் தடையை வெற்றிக் கரமாக கடந்தனர்.