மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், முகுந்த் தோல்வி
|இந்த போட்டி தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
புனே,
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த ராம்குமார் 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 62-வது இடத்தில் இருக்கும் பெட்ரோ மார்டினஸ்சிடம் (ஸ்பெயின்) போராடி தோற்றார்.
இந்த ஆட்டம் 2 மணி 28 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற இந்திய வீரர் முகுந்த் 4-6, 5-7 என்ற நேர்செட்டில் பிளாவியோ கோபோலியிடம் (இத்தாலி) தோற்று நடையை கட்டினார்.
இதன் மூலம் இந்த போட்டி தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. மற்ற ஆட்டங்களில் டிம் வான் ரிஜ்தோவேன் (நெதர்லாந்து), அஸ்லான் கரட்சேவ் (ரஷியா), மேக்ஸிமிலியன் மார்டெரர் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.