சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு கிவிடோவா முன்னேற்றம்
|அரைஇறுதியில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா, அமெரிக்காவின் மேடிசன் கீசை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
Wow. My 40th final tomorrow. Yes, it makes me feel old, but mostly it makes me feel proud! ❤️#CincyTennis pic.twitter.com/i42T6BPANx
— Petra Kvitova (@Petra_Kvitova) August 20, 2022
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 7-6 (7-1), 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ்சை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-6 (7-5), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே போல் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி 7-6 (7-4), 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசையும், குரோஷியாவின் போர்னா கோரிச் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மையும் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-7 (6-8), 6-4,6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீசை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரைஇறுதியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)- சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் மோதுகிறார்கள்.