வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80 ஆயிரம் மட்டுமே உள்ளது - பயிற்சிக்கே திண்டாடி வருவதாக இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் வேதனை..!
|வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக திண்டாடி வருவதாகவும் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக திண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏடிபி சுற்றுப்பயணத்தை தொடர ரூ.1 கோடிக்கான பட்ஜெட்டை தயார் செய்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஜெர்மனியில் உள்ள நான்செல் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த அவர், நிதிப் பற்றாக்குறையால் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அவருக்குப் பிடித்த இடத்தில் பயிற்சி பெற முடியவில்லை.
அவரது நண்பர்கள் சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் கிறிஸ்டோபர் மார்கிஸ் ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர் ஜெர்மனியில் தங்குவதற்கு தேவையான நிதி உதவியளித்துள்ளனர். நிதி நெருக்கடி என்பது அநேகமாக ஒவ்வொரு இந்திய டென்னிஸ் வீரரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆனால் நாட்டின் நம்பர் ஒன் ஒற்றையர் வீரரான சுமித் நாகல், தனக்கும் தனது குடும்பத்திற்கும் போதுமான பணத்தைச் சேமிக்கவில்லை என்பது இந்திய டென்னிஸ் கட்டமைப்பில் உள்ள சிக்கலை வெளிப்படுத்துகிறது.
போட்டிகளில் பெறும் பரிசுத்தொகை, ஐஓசிஎல் வழங்கும் சம்பளம் மற்றும் மகா டென்னிஸ் அறக்கட்டளை மூலம் பெறும் நிதியுதவி என அனைத்தையும் பயிற்சிக்காகவே மீண்டும் செலவிடுவதாக சுமித் நாகல் வேதனை தெரிவித்துள்ளார். டென்னிஸ் வீரர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.