இத்தாலி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் மரியா சக்காரி, அரினா சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
ரோம்,
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீராங்கனையான மரியா சக்காரி உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் போராடி கைப்பற்றிய மரியா சக்காரி 2வது செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் கைப்பற்றினார். இதன் மூலம் 7-6 (7-4), 6-0 என்ற செட் கணக்கில் அன்ஹெலினா கலினினாவை வீழ்த்தி மரியா சக்காரி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.
இதேபோல் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.