< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்.

கோப்புப்படம் 

டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்.

தினத்தந்தி
|
13 Feb 2023 4:05 AM IST

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

சேலஞ்சர் டென்னிஸ்

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது.

4 ஆண்டுக்கு பிறகு சென்னையில் நடக்கும் இந்த சேலஞ்சர் டென்னிசில் 20 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் உலகத் தரவரிசையில் 108-வது இடத்தில் இருக்கும் சீனதைபே வீரர் சுன் சின் செங் முதல் சுற்றில் குரோஷியாவின் நினோ செர்டாருசிச்சை எதிர்கொள்கிறார். 137-ம் நிலை வீரர் ஜேம்ஸ் டக்வொர்த் தகுதிநிலை வீரருடன் மோதுகிறார். பெனிஸ்டன் ரையான் (இங்கிலாந்து), செபாஸ்டியன் அப்னெர் (ஆஸ்திரியா), லுகா நார்டி (இத்தாலி), டிமிடார் குஸ்மனோவ் (பல்கேரியா), மிகைல் குகுஷ்கின் (கஜகஸ்தான்) ஆகிய முன்னணி வீரர்களும் களம் காணுகிறார்கள்.

போர்க் மகன்

இந்திய தரப்பில் பிரனேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ஆகிய இருவருக்கும் ஒற்றையர் பிரிவில் 'வைல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நேரடியாக பிரதான சுற்றில் அடியெடுத்து வைப்பார்கள். இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம்பாலாஜி ஜோடிக்கு பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல்- மார்க் போல்மான்ஸ் இணை கடும் சவாலாக இருக்கும்.

11 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் சுவீடனின் ஜான் போர்க்கின் மகனான லியோ போர்க்குக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டு உள்ளது. 19 வயதான லியோ முதல் சுற்றில் ஹமாட் மெட்ஜிடோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். லியோவுடன் அவரது தந்தை ஜான் போர்க்கும் சென்னை வந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1.06 கோடியாகும். இதில் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.14.47 லட்சம் பரிசுடன், 100 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். 2-வது இடத்தை பிடிக்கும் வீரர் ரூ.8½ லட்சம் பரிசுத்தொகையாக பெறுவார்.

தினசரி காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். போட்டியை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தகுதி சுற்றில்...

முன்னதாக நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சசிகுமார் முகுந்த் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் சித்தார்த் ரவுத்தையும், சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் கலும் புட்டெர்கிலையும், திக்விஜய்பிரதாப் சிங் 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அகிரா சான்ட்லியனையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இன்று காலை பிரதான சுற்றுக்கு முன்பாக தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் சசிகுமார் முகுந்த்- ஜாசன் ஜங்க் (சீனதைபே), சுமித் நாகல்- சங் நாம் (தென்கொரியா), திக்விஜய்பிரதாப் - ஜேம்ஸ் மெக்காப் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறும் வீரர்கள் பிரதான சுற்றை அடைவார்கள்.

மேலும் செய்திகள்