இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக் - மரியா சக்காரி மோதல்
|இண்டியன்வெல்ஸ் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், மரியா சக்காரி ஆகியோர் மோதுகின்றனர்.
இண்டியன்வெல்ஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), உலக தரவரிசையில் 32-வது இடத்தில் இருக்கும் மார்த்தா கோஸ்ட்யூக்கை 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஊதித்தள்ளி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஸ்வியாடெக் இந்த போட்டி தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.
மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் கோகோ காப்பை 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் மரியா சக்காரி, 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இண்டியன்வெல்ஸ் தொடரில் 2022-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இருவரும் மோதியதில் ஸ்வியாடெக் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். இதுவரை இருவரும் 5 முறை நேருக்கு நேர் மோதியதில் சக்காரி 3 ஆட்டங்களில் வென்று முன்னிலை வகிக்கிறார். கடைசி 2 மோதலில் ஸ்வியாடெக் நேர்செட்டில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.