இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி 'சாம்பியன்'
|அமெரிக்காவில் நடந்து வரும் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி பட்டம் வென்று சாதனை படைத்தது.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, போட்டித்தரநிலையில் முதலிடம் வகித்த வெஸ்லி கூல்ஹோப் (நெதர்லாந்து)- நியல் குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை எதிர்கொண்டது. 1 மணி 24 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா-எப்டென் கூட்டணி 6-3, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. அவர்களுக்கு ரூ.3½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிசாகும். இந்த வகை போட்டியில் போபண்ணா வெல்லும் 5-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் 43 வயதான போபண்ணா ஏ.டி.பி. மாஸ்டர்ஸ்1000 வகை டென்னிசில் அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன்பு கனடாவின் டேனியல் நெஸ்டர் 2015-ம் ஆண்டு சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிசில் தனது 42 வயதில் இவ்வகை பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. அதனை போபண்ணா முறியடித்தார்.
இது போபண்ணாவின் 24-வது இரட்டையர் பட்டமாகும். வெற்றிக்கு பிறகு பெங்களூருவைச் சேர்ந்த போபண்ணா கூறுகையில், 'டென்னிசின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இங்கு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. நீண்ட காலமாக இங்கு விளையாடும் நான் பலர் பட்டம் வெல்வதை பார்க்கிறேன். இப்போது எப்டெனுடன் இணைந்து இங்கு முதல் முறையாக நான் கோப்பையை வெல்ல முடிந்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதி ஆட்டத்தில் உலகின் சிறந்த ஜோடிகளில் ஒன்றை சாய்த்து இருக்கிறோம்' என்றார்.
ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்களில் 2-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் ஜானிக் சினெரையும் (இத்தாலி), ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவையும் தோற்கடித்தனர்.
இறுதி ஆட்டத்தில் அல்காரஸ்- மெட்விடேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் வெற்றி பெறும் வீரருக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். அல்காரஸ் வாகை சூடினால் டென்னிஸ் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறுவார்.