அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|அமெரிக்க ஓபன் டென்னிசில் ரபெல் நடால், ஸ்வியாடெக் ஆகியோர் நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நடால் கலக்கல்
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1, 7-5 என்ற நேர் செட்டில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை வீழ்த்தினார். தனது நண்பரான கேஸ்கியூட்டுக்கு எதிராக இதுவரை தோல்வியே சந்திக்காத நடால் அவருக்கு எதிராக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும். நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை எதிர்கொள்கிறார். டியாபோ 3-வது சுற்றில் அர்ஜென்டினாவின் ஸ்வாட்ஸ்மேனுக்கு 7-6 (9-7), 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 2-6, 6-7 (3), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை சாய்த்தார். டைபிரேக்கர் வரை திரில்லிங்காக நீடித்த இந்த ஆட்டம் 4 மணி 8 நிமிடங்கள் நடந்தது. அடுத்த சுற்றில் ரூப்லெவ், இங்கிலாந்தின் கேமரூன் நோரியுடன் மோதுகிறார்.
இதே போல் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச் (குரோஷியா) தன்னை எதிர்த்த டேன் இவான்சை (இங்கிலாந்து) 7-6 (13-11), 6-7 (3-7), 6-2, 7-5 என்ற செட் கணக்கில் விரட்டியடித்தார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜேனிக் சினெர் (இத்தாலி), இவாஷ்கா (பெலாரஸ்) ஆகியோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
வீறுநடை போடும் ஸ்வியாடெக்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்றில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லாரென் டேவிசை (அமெரிக்கா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னதாக 2-வது செட்டில் 1-4 என்று பின்தங்கிய ஸ்வியாடெக் அதன் பிறகு தொடர்ந்து 5 கேம்களை வசப்படுத்தி வெற்றியை நேர் செட்டில் உறுதிப்படுத்தினார். அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுக்கு மேல் தாண்டிராத ஸ்வியாடெக் அடுத்து நீமையரை (ஜெர்மனி) சந்திக்கிறார்.
21-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 5-7, 6-3, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) வெளியேற்றினார். இந்த ஆட்டத்தில் முகுருஜா 3-வது செட்டில் 5-3 என்ற முன்னிலையோடு வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அதன் பிறகு முகுருஜாவின் இரண்டு 'மேட்ச் பாயிண்ட்' வாய்ப்புகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட கிவிடோவா சூப்பர் டைபிரேக்கர் வரை போராடி வெற்றியை தனதாக்கினார்.