பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'இரட்டையர் போட்டிகளின் நாயகன்'-லியாண்டர் பயஸ்
|இந்திய டென்னிஸ் விளையாட்டில் தலை சிறந்த வீரராக திகழ்ந்த லியாண்டர் பயஸ் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கொல்கத்தா,
இந்திய டென்னிஸ் வரலாற்றில் சிறந்த வீரராக ஜொலித்தவர் லியாண்டர் பயஸ். டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் பல பட்டங்களை அள்ளியவர். தொடர்ச்சியாக 7 ஓலிம்பிக் தொடரில் பங்கேற்ற டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர்.
கொல்கத்தாவை சேர்ந்த லியாண்டர் பயஸ் தந்தை, தாய் என இருவரும் விளையாட்டு வீரர்களாக இருந்துள்ளனர். பயஸ் தந்தை 1972 முனிச் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒருவராக இருந்தார். இவரது தாயார் 1980இல் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் பெற்றோர்கள் வழியில் இல்லாமல் பயஸ் டென்னிஸ் போட்டிகளில் ஆர்வம் கொண்டு அதில் முறையாக பயிற்சி பெற்றார்.
சென்னையில் உள்ள பிரட்டானியா அமிர்தராஜ் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பயஸ், 1990இல் விம்பிள்டன் ஜூனியர் தொடரில் தனது 17வது வயதில் பங்கேற்று உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்து கவனத்தை ஈர்த்தார்.
முதல் முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்ற பயஸ், 1992இல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் காலிறுதி வரை முன்னேறினார்.
இதன் பின்னர் 1996இல் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றார். 1952ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு டென்னிஸில் கிடைத்த பதக்கமாக அது அமைந்தது. அத்துடன் அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கமாக பயஸ் வென்ற வெண்கலம் பதக்கமே கிடைத்தது.
அவர் காலகட்டத்தில் டென்னிஸ் விளையாட்டின் அனைத்து முக்கிய தொடர்களில் பங்கேற்று முத்திரை பதிக்கும் விதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து 1998இல் கிராண்ட் ஸ்லாம், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலியா மற்றும் யுஎஸ் ஓபன் அரையிறுதி, இறுதி வரை சென்று ஆதிக்கம் செலுத்தினர்.
ஓற்றையர் ஆட்டத்தை காட்டிலும் இரட்டையர் ஆட்டத்தில் கலக்கி வந்த பயஸ், இரட்டையர்கள் மோதும் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தினார். கலப்பு இரட்டையர் போட்டியிலும் அவர் அதிகமாக பங்கேற்றார். இதில் பல பட்டங்களையும் வென்றார்.
இதுவரை இரட்டையர் பிரிவு போட்டிகளில் உலகின் அனைத்து பிரதான தொடர்களிலும் பங்கேற்று 8 கோப்பைகளையும், 8 ரன்னர் ஆப் கோப்பையும் வென்றுள்ளார் பயஸ். கலப்பு இரட்டையர் போட்டிகளில் 10 பதக்கங்களும், 8 முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான மகேஷ் பூபதியுடன் இணைந்து ஏராளமான வெற்றிகளை குவித்துள்ளார். 1997 முதல் 2010 வரை 24 முறை தொடர்ச்சியாக இந்த இணை டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது.
அதேபோல் 1992 முதல் 2016 வரை தொடர்ச்சியாக 7 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற ஒரே இந்திய டென்னிஸ் வீரராக உள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், அர்ஜுனா விருதுகளும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
20 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் ஜொலித்த லியாண்டர் பயஸ் 2021-இல் ஓய்வை அறிவித்தார். சிினிமாவிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2013இல் வெளிவந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.