< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி கால்இறுதிக்கு தகுதி

கோப்புப்படம் 

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி கால்இறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
4 Jun 2024 2:17 AM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்றில் 11-ம் நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் டேனில் மெட்விடேவுக்கு (ரஷியா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 2004-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீரர் இவர் தான்.

இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றில் எதிராளி விலகியதால் விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு வந்தனர். 3-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- ரேயாஸ் வரெலா மார்ட்டினஸ் (மெக்சிகோ) இணையை சந்தித்தனர். இதில் போபண்ணா கூட்டணி 6-7 (2-7), 6-3, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று கால்இறுதி சுற்றை அடைந்தது.

பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எம்மா நவரோவாவை (அமெரிக்கா) பந்தாடினார். 4-ம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்விடோலினாவை (உக்ரைன்) தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 4-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் அவனிஸ்யானை (ரஷியா) விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பாவ்லினி, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கால்இறுதிக்குள் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். அடுத்து அவர் ரைபகினாவை சந்திக்கிறார்.

17 வயதான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா தன்னை எதிர்த்த பிரான்சின் வர்வரா கிராசெவாவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் சாய்த்து, முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். ஆன்ட்ரீவா கால்இறுதியில் சபலென்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்