< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி தருவைகுளத்தில் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்:சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி தருவைகுளத்தில் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்:சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
19 July 2023 12:15 AM IST

தூத்துக்குடி தருவைகுளத்தில் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றுசட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையிலான 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு நேற்று தூத்துக்குடி வந்தது.

இந்த குழுவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு அரசு மருத்துவமனைக்கு ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். இந்த பணிகளை குறித்த காலத்தில் தரமாக முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

மீனவர்கள் கோரிக்கை

அதனை தொடர்ந்து தருவைகுளம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு செய்த குழுவினர், மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குழு தலைவர் உறுதியளித்தார்.

ஆய்வுக்கூட்டம்

பின்னர் மாலையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர், கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை ஆகிய துறைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட மதிப்பீடுகள் குறித்து குழுவினர் விரிவாக ஆய்வு நடத்தினர்.

2-வது நாளாக இன்று ஆய்வு

இதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்று(புதன்கிழமை) புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகம், ஆலந்தா அணைக்கட்டு ஆகிய இடங்களில் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் செய்திகள்