< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா கால்இறுதிக்கு தகுதி
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா கால்இறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
4 July 2022 8:22 PM GMT

கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறினார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 7-5, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹலெப் (ருமேனியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள சிலி வீரர் கிறிஸ்டியன் காரின் சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 2-6, 5-7, 7-6 (7-3), 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருக்கு அதிர்ச்சி அளித்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்தடவையாக கால்இறுதியை எட்டினார். திரில்லிங்கான இந்த ஆட்டம் 4 மணி 34 நிமிடங்கள் நீடித்தது. மற்ற ஆட்டங்களில் நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 'வைல்டு கார்டு' வாய்ப்பு மூலம் பங்கேற்ற டிம் வான் ரிஜ்தோவெனை (நெதர்லாந்து) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னெரை சந்திக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-மேட் பாவிக் (குரோஷியா) ஜோடி, இவான் டோடிக் (குரோஷிய)-லாதிஷா சான் (சீன தைபே) இணையை சந்திக்க இருந்தது. காயம் காரணமாக இவான் டோடிக்-லாதிஷா சான் ஜோடி விலகியதை அடுத்து சானியா மிர்சா-மேட் பாவிக் இணை கால்இறுதிக்குள் நுழைந்தது.

மேலும் செய்திகள்