< Back
டென்னிஸ்
துபாய் டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
டென்னிஸ்

துபாய் டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
3 March 2023 2:30 AM IST

கால்இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

துபாய்,

துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருப்பவருமான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலி வீரர் லோரென்சோ சோனிகோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 7-5, 6-4 என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபனில் கணுக்காலில் காயம் அடைந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதன் பிறகு அரைஇறுதிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு கால்இறுதியில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப்பை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

அதே சமயம் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-சகெத் மைனெனி ஜோடி 2-6,2-6 என்ற நேர்செட்டில் லாய்ட் கிளாஸ்பூல் (இங்கிலாந்து)-ஹெலிவாரா (பின்லாந்து) இணையிடம் தோற்று வெளியேறியது.

மேலும் செய்திகள்