< Back
டென்னிஸ்
23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஜோகோவிச் சாதனை - ரூ.20½ கோடியை பரிசாக அள்ளினார்
டென்னிஸ்

23-வது 'கிராண்ட்ஸ்லாம்' பட்டத்தை வென்று ஜோகோவிச் சாதனை - ரூ.20½ கோடியை பரிசாக அள்ளினார்

தினத்தந்தி
|
12 Jun 2023 2:59 AM IST

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ரபெல் நடாலை பின்னுக்குத் தள்ளி ஜோகோவிச் முதலிடம் பிடித்துள்ளார்.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய ஜோகோவிச், தனது கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையை 23-ஆக உயர்த்தி, ரபெல் நடாலை பின்னுக்கு தள்ளினார்.

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வாரங்களாக பாரீஸ் நகரில் நடந்து வந்தது. களிமண் தரை போட்டியான இதில் நேற்றிரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட்டை (நார்வே) சந்தித்தார். மந்தமாக தொடங்கிய ஜோகோவிச் முதல் செட்டில் 1-4 என்று சற்று தடுமாறினார். அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்த அவர் 6-6 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து டைபிரேக்கரில் தனது பிடியை இறுக்கி முதல் செட்டை வசப்படுத்திய ஜோகோவிச், ஆக்ரோஷமான ஷாட்டுகள் மற்றும் வலிமையான சர்வீஸ்கள் மூலம் எதிராளியை அடுத்த இரு செட்டுகளில் மீள விடாமல் திணறடித்தார்.

3 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து பிரெஞ்சு ஓபன் கோப்பையை 3-வது முறையாக உச்சிமுகர்ந்தார். ஏற்கனவே 2016, 2021-ம் ஆண்டுகளிலும் பிரெஞ்சு ஓபனை வென்று இருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச்சின் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து இருந்த ஸ்பெயினின் ரபெல் நடாலை (22 பட்டம்) பின்னுக்குத் தள்ளிய ஜோகோவிச் தனியாக முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்து இருக்கிறார். காயம் காரணமாக நடால் பிரெஞ்சு ஓபனில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற 36 வயதான ஜோகோவிச் ரூ.20½ கோடியை பரிசாக அள்ளினார். அத்துடன் இந்த வெற்றியின் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசை முந்தி மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுகிறார்.

அதே சமயம் தொடர்ந்து 2-வது ஆண்டாக பிரெஞ்சு ஓபன் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய கேஸ்பர் ரூட்டுக்கு, கிராண்ட்ஸ்லாம் கோப்பை கனவு மீண்டும் ஒரு முறை தகர்ந்துள்ளது. அவருக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைத்தது.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள்

செர்பிய வீரர் ஜோகோவிச் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-10, பிரெஞ்சு ஓபன்-3, விம்பிள்டன்-7, அமெரிக்க ஓபன்-3 என்று மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தனதாக்கி 'நம்பர்' ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் விவரம் வருமாறு:-

ஜோகோவிச் (செர்பியா) 23

ரபெல் நடால் (ஸ்பெயின்) 22

பெடரர் (சுவிட்சர்லாந்து) 20

பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) 14

ராய் எமர்சன்(ஆஸ்திரேலியா) 12

மேலும் செய்திகள்