< Back
டென்னிஸ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி
டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி

தினத்தந்தி
|
17 Sept 2023 2:22 AM IST

தசைப்பிடிப்பு காரணமாக சசிகுமார் முகுந்த் போட்டியில் இருந்து விலகினார்.

லக்னோ,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்2 சுற்றில் இந்தியா-மொராக்கோ அணிகள் மோதும் ஆட்டம் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. இதில் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 365-வது இடத்தில் இருக்கும் சசிகுமார் முகுந்த், 557-வது இடத்தில் 20 வயது யாசின் டிலியியை (மொராக்கோ) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-4) என்று கைப்பற்றிய சசிகுமார் முகுந்த் அடுத்த செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்தார். 3-வது மற்றும் கடைசி செட்டில் மொராக்கோவின் யாசின் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது தசைப்பிடிப்பு காரணமாக சசிகுமார் முகுந்த் போட்டியில் இருந்து விலகினார். இதனால் யாசின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடந்த 2-வது ஆட்டத்தில் தரவரிசையில் 156-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 779-வது இடத்தில் உள்ள ஆடம் மொன்டிரை (மொராக்கோ) துவம்சம் செய்தார். இதன் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இன்று பகல் 1 மணிக்கு நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி இணை, மொராக்கோவின் எலியாட் பென்செட்ரிட்-யோனிஸ் லலாமி லாரோஸ்சி ஜோடியுடன் மோதுகிறது. இதைத்தொடர்ந்து மாற்று ஒற்றையர் ஆட்டம் நடைபெறுகிறது. 43 வயதான ரோகன் போபண்ணா இந்த போட்டியுடன் டேவிஸ் கோப்பை டென்னிசில் இருந்து விடைபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்