டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்
|இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் டென்மார்க்கில் உள்ள ஹில்லெராட் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
ஹில்லெராட்,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் டென்மார்க்கில் உள்ள ஹில்லெராட் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் இன்று நடைபெறும் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் ஹேல்கர் ரூனே-தரவரிசையில் 577-வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரி (இந்தியா) ஆகியோர் மோதுகின்றனர்.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 506-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், 484-வது இடத்தில் உள்ள ஆகஸ்ட் ஹோல்ம்கிரேனுடன் (டென்மார்க்) மோதுகிறார்.
2-வது நாளில் நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி, டென்மார்க்கின் ஜோனஸ் இங்கில்சென்-கிறிஸ்டியன் சிக்ஸ்கார்ட் இணையை எதிர்கொள்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ஹோல்கர் ரூனே -சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோல்ம்கிரேன்-யுகி பாம்ப்ரி ஆகியோர் சந்திக்கின்றனர்.