< Back
டென்னிஸ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நார்வே அணியிடம் இந்தியா தோல்வி
டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நார்வே அணியிடம் இந்தியா தோல்வி

தினத்தந்தி
|
18 Sept 2022 1:31 AM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நார்வே அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்1 முதல் சுற்றில் இந்தியா-நார்வே அணிகள் இடையிலான ஆட்டம் நார்வேயில் உள்ள லில்லிஹேமரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும் அண்மையில் நடந்த அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான நார்வே வீரர் கேஸ்பர் ரூட், தரவரிசையில் 335-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை சந்தித்தார். இந்த மோதலில் எதிர்பார்த்தபடி கேஸ்பர் ரூட் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 62 நிமிடமே தேவைப்பட்டது.

இதனை அடுத்து நடந்த இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 276-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ராம்குமார், தரவரிசையில் 325-வது இடத்தில் உள்ள விக்டர் துராசோவிச்சை (நார்வே) எதிர்கொண்டார். சென்னையை சேர்ந்த ராம்குமார் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக செயல்படவில்லை. 1 மணி 16 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ராம்குமார் 1-6, 4-6 என்ற நேர்செட்டில் விக்டர் துராசோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-சகெத் மைனெனி ஜோடி 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் நார்வேயின் கேஸ்பர் ரூட்-விக்டர் துராசோவிச் இணையிடம் வீழ்ந்தது. இதனால் நார்வே அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

மேலும் செய்திகள்