< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் டென்னிஸ்: லினெட், ஸ்வான் கால்இறுதிக்கு தகுதி
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: லினெட், ஸ்வான் கால்இறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
16 Sept 2022 6:17 AM IST

சென்னை ஓபன் டென்னிசில் போலந்தின் லினெட், இங்கிலாந்தின் ஸ்வான் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

சென்னை,


சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவும், அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்காவும் பலப்பரீட்சையில் இறங்கினர்.

முதல் செட்டை தாட்ஜனாவும், 2-வது செட்டை போடோரோஸ்காவும் வசப்படுத்த, கடைசி செட்டில் அனல் பறந்தது. இருவரும் நீயா-நானா என்று டைபிரேக்கர் வரை மல்லுகட்டினர். முடிவில் போடோரோஸ்கா 3-6, 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் தாட்ஜனாவுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் 67-ம் நிலை வீராங்கனையான மேக்டா லினெட் (போலந்து) 6-2, 6-0 என்ற நேர் செட்டில் ரஷியாவின் ஒக்சனா செலக்மேத்வாவை பந்தாடினார். இதில் ஒக்சனா பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலையில் அடிப்பது போன்ற தவறுகளை மட்டும் 47 முறை இழைத்ததால் லினெட்டின் வெற்றி சுலபமானது.

இதே போல இங்கிலாந்தின் கேட்டி ஸ்வான் தன்னை எதிர்த்து ஆடிய ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவை 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்து கால்இறுதி சுற்றை அடைந்தார். ஸ்வான் அடுத்து ஜப்பானின் நாவ் ஹிபினோவை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்