< Back
டென்னிஸ்
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் லின்டா புருவிர்தோவா

தினத்தந்தி
|
18 Sep 2022 4:28 PM GMT

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை,

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதில் 25 நாடுகளை சேர்ந்த 75 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய நட்சத்திரங்கள் யாரும் கால்இறுதியை தாண்டவில்லை.

இந்த நிலையில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 67-வது இடம் வகிக்கும் மேக்டா லினெட் (போலந்து), 130-ம் நிலை வீராங்கனையான லின்டா புருவிர்தோவாவுடன் (செக்குடியரசு) பலப்பரீட்சை நடத்தினார்.

இருவரும் சரிசம பலத்துடன் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. ரசிகர்களும் இரு தரப்பையும் இடைவிடாது கைதட்டியும், கரவொலி எழுப்பியும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஆனாலும் லின்டாவுக்கே ஆதரவு சற்று அதிகமாக தென்பட்டது. முதல் செட்டை லினெட் கைப்பற்ற, 2-வது செட்டை லின்டா வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.

17 வயது வீராங்கனைக்கு மகுடம்

இதனால் கடைசி செட்டில் மேலும் விறுவிறுப்பு எகிறியது. இதன் 4-வது கேமில் லின்டாவின் சர்வீசை லினெட் முறியடித்து 3-1 என்று முன்னிலை பெற்றார். இந்த சமயத்தில் கால்வலியால் அவதிப்பட்ட லினெட், பின்னர் முதலுதவி எடுத்துக் கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி எழுச்சி பெற்ற 'இளம் புயல்' லின்டா, எதிராளியின் இரு சர்வீஸ்களை பிரேக் செய்ததுடன், 4-4 என்று சமநிலையை உருவாக்கினார். அதே உத்வேகத்துடன் அடுத்தடுத்து மேலும் இரு கேம்களை வென்று லின்டா வெற்றிக்கனியை பறித்தார்.

2 மணி 40 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் லின்டா புருவிர்தோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லினெட்டை தோற்கடித்து மகுடம் சூடினார். 17 வயதான லின்டா புருவிர்தோவா உச்சிமுகர்ந்த முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.

வெற்றி பெற்றதும் லின்டா மைதானத்தில் அப்படியே சரிந்தார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவரது கண்களில் ஆனந்த் கண்ணீர் எட்டிப்பார்த்தது. பின்னர் தழுதழுத்த குரலில் பேசிய லின்டா, 'இது தான் எனது முதல் சர்வதேச பட்டமாகும். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாகும். இதே போல் சென்னையையும், ரசிகர்கள் அளித்த ஆதரவையும் மறக்க மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இங்கு வருவேன்' என்றார்.

கோப்பையை வென்ற அவருக்கு ரூ.26 லட்சம் பரிசுத்தொகையுடன் 280 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த லினெட்டுக்கு ரூ.16 லட்சம் பரிசாக கிடைத்தது.

இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற லின்டாவுக்கு பரிசுக்கோப்பையை வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.க்கள். கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா, டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த லுசா ஸ்டெபானி (பிரேசில்)- கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா) கூட்டணி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் அன்ன பிளின்கோவா (ரஷியா)- நடிலா ஜாலமிட்ஸ் (ஜார்ஜியா) இணையை பந்தாடி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஒரு தரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தை 58 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த டாப்ரோஸ்கி- ஸ்டெபானி இணைக்கு ரூ9½லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய பிளின்கோவா ஜோடிக்கு ரூ5½ லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்