சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- லுசா ஸ்டெபானி இணை சாம்பியன்
|சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இரட்டையர் இறுதிபோட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- லுசா ஸ்டெபானி இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.
சென்னை,
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)-லுசா ஸ்டெபானி (பிரேசில்) இணை 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பீங்க்டார்ன் லீப்பீச் (தாய்லாந்து)-மாயுகா உஜ்ஜிமா (ஜப்பான்) ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)-லுசா ஸ்டெபானி (பிரேசில்) இணை அன்னா லின்கோவா (ரஷியா)-நடிலா ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) இணையை எதிர் கொண்டது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அன்னா லின்கோவா -நடிலா ஜலாமிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.