< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் புசார்ட், கர்மன் தண்டி வெற்றி
டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் புசார்ட், கர்மன் தண்டி வெற்றி

தினத்தந்தி
|
13 Sept 2022 5:57 AM IST

சென்னை ஓபன் டென்னிசில் முதல் சுற்றில் புசார்ட், கர்மன் தண்டி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. சென்னையில் முதல்முறையாக நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில், 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான கனடாவின் யூஜெனி புசார்ட், சுவிட்சர்லாந்தின் ஜோனி ஜூகெரை எதிர்கொண்டார். முதல் செட்டை வெல்ல டைபிரேக்கர் வரை போராடிய புசார்ட் 2-வது செட்டில் எதிராளியை எளிதில் அடக்கினார். முடிவில் புசார்ட் 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்டில் ஜூகெரை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். காயம் காரணமாக சமீப காலமாக தடுமாற்றத்தை சந்தித்த 28 வயதான புசார்ட், 2021-ம் ஆண்டு மார்ச்சுக்கு பிறகு டபிள்யூ.டி.ஏ. டென்னிசின் பிரதான சுற்றில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 359-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கர்மன் தண்டி, 109-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் குளோ பாக்கிட்டுடன் மோதினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் துடிப்புடன் மட்டையை சுழட்டிய கர்மன் தண்டி 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பாக்கிட்டை விரட்டியடித்து வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 35 நிமிடங்கள் நீடித்தது. டெல்லியைச் சேர்ந்த கர்மன் தண்டி அடுத்து புசார்ட்டை சந்திக்கிறார்.

இதே போல் ரெபக்கோ மரியோ (கனடா), கதர்ஸினா கவா (போலந்து), நாவ் ஹிபினோ (ஜப்பான்), லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

2-வது நாளான இன்று போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றுள்ள அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவை எதிர்கொள்கிறார். இந்திய நட்சத்திர வீராங்கனை அங்கிதா ரெய்னா, இரண்டு குழந்தைகளின் தாயாரான ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் மோதுகிறார்.

மேலும் செய்திகள்