சென்னை ஓபன் டென்னிஸ்: அலிசன் ரிஸ்கே அதிர்ச்சி தோல்வி
|சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே அதிர்ச்சி தோல்வி கண்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 23-வது இடம் வகிப்பவரும், போட்டித் தரநிலையில் முதலிடம் பெற்றவருமான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அவர் 147-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவுடன் மோதினார். இதில் எதிராளியின் அதிரடியான ஷாட்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.1 மணி 29 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் அலிசன் ரிஸ்கே 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பணிந்தார்.
அண்மையில் அமெரிக்க ஓபனில் 4-வது சுற்று வரை முன்னேறி இருந்த அலிசன் ரிஸ்கே சென்னை ஓபனில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள வீராங்கனைகளில் ஒருவராக கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் தொடக்க தடையைகூட தாண்ட முடியாமல் நடையை கட்டிவிட்டார். இவர் முன்னாள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் அமிர்தராஜின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலிசனுக்கு செக் வைத்த 23 வயதான கசனோவா டாப்-30 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை வீழ்த்துவது இது 3-வது முறையாகும். அவர் கூறும் போது, 'இது போன்ற வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இதற்காக எனது முழு முயற்சியை வெளிப்படுத்தினேன்.
ஆரம்பத்தில் அமெரிக்க ஓபனுக்கு பிறகு ஓய்வு எடுக்க விரும்பினேன். ஆனால் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றிலேயே தோற்று போனேன். அப்போது இந்தியாவில் நடக்க இருக்கும் போட்டி குறித்து அறிந்தேன். நாம் ஏன் இந்தியாவுக்கு செல்லக்கூடாது என்று யோசித்தேன். இதில் பங்கேற்கும் முடிவுக்கு வந்தேன்' என்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா, 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டு குழந்தைகளின் தாயாரான 35 வயதான தாட்ஜனா தனது குடும்பத்தினர் முன்னிலையில் விளையாடுவது உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிப்பதாக தெரிவித்தார்.
இதே போல் கேட்டி ஸ்வான்( இங்கிலாந்து), நடியா போடோரோஸ்கா( அர்ஜென்டினா), கரோல் ஜாவ்( கனடா) , செலக்மேத்வா( ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), வர்வரா கிராசெவா(ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் வெற்றி பெற்றனர்.