< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீரர் புர்செல் சாம்பியன்
டென்னிஸ்

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீரர் புர்செல் 'சாம்பியன்'

தினத்தந்தி
|
20 Feb 2023 2:09 AM IST

புர்செல் 5-7, 7-6 (2), 6-4 என்ற செட் கணக்கில் அல்போரனை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார்.

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்லும், அமெரிக்காவின் நிகோலஸ் மொரினோ டி அல்போரனும் மோதினர்.

இருவரும் நீயா-நானா என்று கடுமையாக மல்லுக்கட்டியதால் களத்தில் அனல் பறந்தது. இதில் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் 3-5 என்று பின்தங்கிய புர்செல் இரு முறை எதிராளியின் மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தப்பித்ததோடு 'டைபிரேக்கர்' வரை போராடி இந்த செட்டை வசப்படுத்தினார். அதே உத்வேகத்துடன் 3-வது செட்டிலும் அசத்தினார்.

3 மணி 10 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான ஆட்டத்தின் முடிவில் புர்செல் 5-7, 7-6 (2), 6-4 என்ற செட் கணக்கில் அல்போரனை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார். அவர் வென்ற 3-வது சேலஞ்சர் கோப்பை இதுவாகும்.

வாகை சூடிய 24 வயதான மேக்ஸ் புர்செல்லுக்கு 14.47 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அத்துடன் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் புர்செல் 203-ல் இருந்து 155-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 2-வது இடத்தை பிடித்த அல்போரன் ரூ.8½ லட்சத்தை பரிசாக பெற்றார்.

மேலும் செய்திகள்