சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அர்ஜூன்-கிளார்க் ஜோடி 'சாம்பியன்'
|சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் அர்ஜூன்-கிளார்க் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜூன் கதே (இந்தியா)-கிளார்க் (இங்கிலாந்து) ஜோடி 6-0, 6-4 என்ற நேர்செட்டில் செபாஸ்டியன் ஆப்னெர் (ஆஸ்திரியா)-நினோ செர்டாய்சிச் (குரோஷியா) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் நிகோலஸ் மொரினோ டி அல்போரன் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் இந்தியாவின் சுமித் நாகலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் புர்செல் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் டேன் ஸ்வீனியை விரட்டியடித்து இறுதிப்போட்டியை எட்டினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நிகோலஸ் மொரினோ-மேக்ஸ் புர்செல் ஆகியோர் மோதுகின்றனர்.