< Back
டென்னிஸ்
சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க புசார்ட், அங்கிதா ரெய்னாவுக்கு வைல்டு கார்டு வாய்ப்பு
டென்னிஸ்

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க புசார்ட், அங்கிதா ரெய்னாவுக்கு 'வைல்டு கார்டு' வாய்ப்பு

தினத்தந்தி
|
24 Aug 2022 2:15 AM IST

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கனடா வீராங்கனை யூஜெனி புசார்ட், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்தார்.

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ்

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. முந்தைய 2 நாட்கள் (10,11-ந் தேதி) தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. சர்வதேச பெண்கள் போட்டி சென்னையில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.26½ லட்சமும், இரட்டையர் பிரிவில் மகுடம் சூடும் ஜோடிக்கு ரூ.9½ லட்சமும் பரிசாக வழங்கப்படும். போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த டென்னிஸ் திருவிழாவில் ஒற்றையர் பிரிவில், சமீபத்தில் சின்சினாட்டி போட்டியில் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 17-வது இடம் வகிப்பவருமான கரோலின் கார்சியா (பிரான்ஸ்), 29-ம் நிலை வீராங்கனை அலிசன் ரிஸ்கே அமிர்தராஜ் (அமெரிக்கா), 32-வது இடத்தில் இருக்கும் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), வர்வரா கிராசெவா (ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), ரெபெக்கா பீட்டர்சன் (சுவீடன்), டாட்ஜனா மரியா (ஜெர்மனி) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இதில் அலிசன் ரிஸ்கே, தமிழக முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜின் சகோதரர் ஆனந்த் அமிர்தராஜின் மருமகள் ஆவார். இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களம் இறங்குகின்றன.

விஜய் அமிர்தராஜ் பேட்டி

போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவருமான விஜய் அமிர்தராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு சர்வதேச டென்னிஸ் போட்டி திரும்பி இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வலுவான ஆதரவால் இந்த போட்டி சென்னைக்கு வந்துள்ளது. விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி சென்னையின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றுவதாக இருக்கும். அத்துடன் இளம் வீராங்கனைகளை டென்னிஸ் பக்கம் வெகுவாக ஈர்க்கும் என்று நம்புகிறேன்.

ஒற்றையர் பிரிவில், 2014-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் இறுதி சுற்றுவரை முன்னேறியவரான கனடாவின் யூஜெனி புசார்ட், குஜராத்தை சேர்ந்த இந்தியாவின் 'நம்பர் ஒன்' வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆகியோருக்கு தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள வகை செய்யும் 'வைல்டு கார்டு' சலுகை வழங்கப்படுகிறது. எஞ்சிய இரு 'வைல்டு கார்டு' வாய்ப்பு டாப்-20 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இதே போல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷர்மதா பாலு-ரியா பாட்டியா இணைக்கு 'வைல்டு கார்டு' அளிக்கப்படுகிறது. வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி ஆகியவற்றுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சானியா கலந்து கொள்வாரா?

இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவிடம் விம்பிள்டன் போட்டியின் போது நீண்ட நேரம் விவாதித்தேன். தற்போது அவர் காயம் காரணமாக அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் இந்த போட்டிக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி விடுவாரா? என்பது தெரியவில்லை. நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் விளையாட முடியாவிட்டாலும், இந்த போட்டியின் போது அவரை அழைத்து பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம்.

ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டியை மீண்டும் சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் போட்டி அட்டவணை நெருக்கமாக இருக்கிறது. இருப்பினும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை சென்னைக்கு கொண்டுவர நாங்கள் முயற்சி செய்வோம்.

இவ்வாறு விஜய் அமிர்தராஜ் கூறினார்.

ஸ்டேடியம் புதுப்பிப்பு

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், 'முதல்-அமைச்சரின் வழிகாட்டிதலின்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்பட்டது. இதே போல் சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியும் எல்லோரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தப்படும். இந்த போட்டியை நடத்த முதல்கட்டமாக ரூ.5 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ரூ.3 கோடி செலவில் நவீன மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.1½ கோடியில் ஸ்டேடியத்தை சீரமைக்கும் பணியும், ரூ.1 கோடியில் 6 ஆடுகளங்களை புதுப்பிக்கும் பணியும் நடக்கிறது. எல்லா பணிகளும் செப்டம்பர் 4-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு ஸ்டேடியம் தயார் நிலையில் இருக்கும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் பிரேம்குமார் கர்ரா மற்றும் போட்டிக்கான ஸ்பான்சர் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான டிக்கெட் விலை என்ன?

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியின் அனைத்து நாட்களிலும் ஆட்டத்தை நேரில் காண்பதற்கான சீசன் டிக்கெட் விலை ரூ.1,000, ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என்று மூன்று வகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் தினசரி கட்டணமாக முதல் 4 நாட்களில் ஆட்டத்தை பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ.100, ரூ.200, ரூ.300 ஆகும். கடைசி 3 நாட்களில் தினசரி ஆட்டத்தை காண டிக்கெட் விலை ரூ.200, ரூ.400, ரூ.600 ஆகும். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை chennaiopenwta.in. என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பெறலாம். டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்