சாம்பியன் பட்டம்: பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
|சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சீனாவின் வாங் ஷியை 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். சர்வதேச அளவிலான WTA 500 தொடர்களில் பி.வி.சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த நிலையில், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"பி.வி.சிந்து தனது முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அவர் தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி, மற்ற விளையாட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.