கனடா ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
|அல்காரஸ் தனது 3-வது சுற்று போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டொராண்டோ,
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், போலந்து நாட்டின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார். இந்த போட்டியின் தொடக்கத்தில் ஹர்காக்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை ஹர்காக்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதன் பின் எழுச்சி பெற்ற அல்காரஸ் கடைசி இரண்டு செட்டுகளையும் போராடி கைப்பற்றினார். கடைசி இரண்டு செட்டுகளும் டை பிரேக்கர் வரை சென்றது. 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் அல்காரஸ் 3-6, 7-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அல்காரஸ் காலிறுதியில் அமெரிக்க வீரரான டாமி பால் உடன் பலபரீட்சை நடத்த உள்ளார்.