விம்பிள்டன் டென்னிசில் ஜோகோவிச்சை வீழ்த்தியது இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: அல்காரஸ் பேட்டி
|விம்பிள்டன் டென்னிசில் ஜோகோவிச்சை வீழ்த்தியது இளம் வீரர்களுக்கு நம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் என்று அல்காரஸ் கூறியுள்ளார்.
லண்டன்,
அல்காரஸ் 'சாம்பியன்'
லண்டனில் நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்த விம்பிள்டன் டென்னிசின் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 7 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சாய்த்து கோப்பையை கைப்பற்றினார். இந்த வெற்றிக்காக அவர் 4 மணி 42 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. விம்பிள்டனில் அதிக நேரம் நீடித்த இறுதிப்போட்டிகளில் இது 2-வது இடத்தை பிடித்தது.
'டென்னிசின் உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் விம்பிள்டனில் 2002-ம் ஆண்டில் இருந்து ரோஜர் பெடரர், ரபெல் நடால், ஆன்டி முர்ரே, ஜோகோவிச் ஆகிய 4 வீரர்களில் ஒருவரே மகுடம் சூடி வந்தனர். அவர்களின் ஆதிக்கத்துக்கு 20 வயதான அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்து, புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
வெற்றிக்கு பிறகு அல்காரஸ் கூறியதாவது:-
நான் டென்னிஸ் விளையாடத் தொடங்கியதில் இருந்து ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த கனவு இப்போது நனவாகி விட்டது. எனக்கு வயது 20 தான். இது போன்ற சிறப்புமிக்க தருணங்களையும், அனுபவங்களையும் சந்தித்ததில்லை. குறுகிய காலத்தில் இத்தகைய உயர்ந்த நிலையை எட்டுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான, மிகப்பெரிய தருணம் இது. விம்பிள்டனில் மத்திய ஆடுகளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட ஜோகோவிச்சை அதுவும் இளம் வயதிலேயே வீழ்த்தி வரலாறு படைத்திருப்பது உண்மையிலேயே வியப்பாக உள்ளது. இதை ஒரு போதும் மறக்க மாட்டேன். அவரை போன்ற வீரர்களை தோற்கடிப்பதை பார்ப்பது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நல்ல விஷயம். தங்களாலும் இதை செய்ய முடியும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுக்கும். எனவே இது எனக்கும், இளம் வீரர்களுக்கும் சிறப்பானது.
மன்னர் முன்னிலையில்...
இறுதிப்போட்டிக்கு முன்பாக ஜோகோவிச்சை வீழ்த்துவதற்கு 5 செட் வரை விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரை போன்ற ஜாம்பவானை எதிர்கொள்வதற்கு மனதளவிலும், உடல்ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. பிரெஞ்சு ஓபனில் அரைஇறுதியில் தோற்றதில் இருந்து நான் முற்றிலும் வித்தியாசமான வீரராக மாறி விட்டேன். அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதுடன் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். சொல்லப்போனால் மனதளவில் கொஞ்சம் வேறுவிதமாக தயாரானேன். இதனால் பிரெஞ்சு ஓபனை விட இதில் நெருக்கடியை திறம்பட கையாண்டேன். இந்த ஆட்டத்தில் நான் 2-வது செட்டை இழந்திருந்தால் (டைபிரேக்கர் வரை நீடித்தது) அனேகமாக கோப்பையை இழந்திருப்பேன். நேர் செட்டிலேயே வீழ்ந்து இருப்பேன். ஆனால் அது தான் எனக்கு எழுச்சி பெற உத்வேகம் தந்தது.
ஸ்பெயின் மன்னர் 6-ம் பிலிப் இங்கு வந்து எனக்கு ஆதரவு அளித்தது உண்மையிலேயே பெருமையாக இருந்தது. அவர் முன் நான் விளையாடிய இரு ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளேன். இதே போல் இன்னும் என்னுடைய நிறைய ஆட்டங்களை பார்க்க அவர் வருவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அல்காரஸ் கூறினார்.
ஜோகோவிச் கருத்து
36 வயதான ஜோகோவிச் கூறுகையில், 'இந்த தோல்வி வேதனை அளிக்கிறது. இவ்வளவு நெருங்கி வந்து தோற்றதை ஜீரணிக்கவே கடினமாக உள்ளது. நான் சிறந்த வீரரிடம் தான் தோற்று இருக்கிறேன். அவருக்கு வாழ்த்துகள்' என்றார்.
டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதிசுற்று நவம்பர் மாதம் துருக்கியில் நடக்கிறது. விம்பிள்டனை வென்றதன் மூலம் இந்த போட்டிக்கு முதல் வீரராக அல்காரஸ் தகுதி பெற்றுள்ளார். தொடர்ந்து 2-வது ஆண்டாக அல்காரஸ் உலக டூர் இறுதி சுற்றில் விளையாட உள்ளார்.
தரவரிசை பட்டியல்
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. அல்காரஸ் 29-வது வாரமாக 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், ரஷியாவின் மெட்விடேவ் 3-வது இடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையரில் முதல் 7 இடங்களில் மாற்றமில்லை. போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், கஜகஸ்தானின் ரைபகினா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக உச்சிமுகர்ந்த செக்குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவா கிடுகிடுவென 32 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும்.