ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி..!
|இதில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்கா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையும் '4 கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள 19 வயது வீராங்கனையான லிண்டா நோஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை இழந்த லிண்டா நோஸ்கோவா சரிவில் இருந்து மீண்டு அடுத்த 2 செட்களிலும் அபாரமாக செயல்பட்டு 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி அசத்தினார். 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறினார்.
இதில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-1, 7-5 என்ற நேர்செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கின்வென் செங் (சீனா), டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா (உக்ரைன்), அன்னா கலின்ஸ்கயா (ரஷியா), ஜாஸ்மின் பாலினி (இத்தாலி), ஓசியன் டோடின் (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.