ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-ம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) உடன் மோதினார்.
சம பலம் வாய்ந்த 2 வீரர்கள் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. இதில் முதல் இரு செட்டுகளை ஸ்வெரேவ் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை மெத்வதேவ் கைப்பற்றினார். இதனால் கடைசி செட் பரபரப்புக்கு உள்ளானது.
இதில் கடைசி செட்டை மெத்வதேவ் எளிதில் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 5-7, 3-6, 7-6, 7-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மெத்வதேவ் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.